Friday, March 20, 2020
Tuesday, March 10, 2020
விக்டோரியனில் இடம் மாற்றப்பட்ட எழுத்துகள்
பாமினி அல்லது டைப்ரைட்டர் முறையில் தட்டுகிறவர்கள் சில எழுத்துகள் இடம் மாற்றப்பட்டிருப்பதை உணருவார்கள். அவை ஏன் இடம் மாற்றப்பட்டுள்ளன என்பதை விளக்குவதற்கே இப்பதிவு வழங்கப்படுகிறது.
இ
காற்புள்ளியில் (,) இருக்க வேண்டிய இந்த எழுத்து, விக்டோரியனில் ‘z’ என்ற
இடத்துக்கு மாறியுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. (1) காற்புள்ளி இருக்க
வேண்டிய இடத்தில் இந்த ‘இ’ என்ற எழுத்தை வைத்தால், ஆங்கிலத்திலும் தமிழிலும் தட்டுகிறவர்களுக்கு
தடுமாற்றம் ஏற்படும். ஆங்கிலத்தில் இருக்கும் போது காற்புள்ளியை அது இருக்கும் இடத்திலேயே
தட்டும் நிலையில், தமிழில் தட்டும் போது, முற்றுப்புள்ளியை (.) தட்டினால்தான் காற்புள்ளி
தோன்றும். இக்குழப்பத்தைத் தவிர்க்க, ‘இ’ என்ற எழுத்து இடம் மாற்றப்பட்டுள்ளது.
(2) இந்த எழுத்து ஏன் ‘z’ என்ற இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது? என்ற கேள்வி அடுத்து
எழுகிறது. பாமினி/டைப்ரைட்டர் முறையில், இந்த இடத்தில் ‘ண’ என்ற எழுத்து இடம் பெற்றிருக்கிறது.
இந்த எழுத்து () அடிப்படை எழுத்து என்பதால், உயிரெழுத்து வரிசையோடு அதை அடுக்க முடியாது.
எனவே, இந்த எழுத்து ‘q’ என்ற ஆங்கில எழுத்து இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
‘z’ என்ற ஆங்கில எழுத்து இப்போது காலியாக இருப்பதால், அந்த இடத்தில் ‘இ’ என்ற எழுத்து
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ண
பாமினி/டைப்ரைட்டர் முறையில் தமிழ் அடிப்படை எழுத்துகளில் (Basic Letters)
இந்த எழுத்து மட்டுமே நான்காவது வரிசையில் இடம் பெற்றிருக்கிறது. எனவே, இதனை 2வது வரிசையின்
முதல் விசையில் ‘q’ என்ற எழுத்தின் விசைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‘q’ எழுத்தில்
‘ணு’ என்ற எழுத்து வைக்கப்பட்டுள்ளது விசை அடுக்கு முறையில் விநோதமாகக் காணப்படுகிறது
என்பதால் விக்டோரியனில் அது அகற்றப்பட்டுள்ளது.
ழ
இந்த எழுத்து பாமினி/டைப்ரைட்டர் முறையில் ‘H’ என்ற ஆங்கில எழுத்தின் இடத்தில்
வைக்கப்பட்டிருந்தது. விக்டோரியனில் அனைத்து தமிழ் அடிப்படை எழுத்துகளும் கீழ் தட்டில்
(Lower Case) வைக்கப்பட வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, முன்பு ‘H’
என்ற ஆங்கில எழுத்தில் இருந்த இந்த எழுத்து இப்போது ‘o’ என்ற ஆங்கில எழுத்து இருக்கும் இடத்துக்குக்
கொண்டு வரப்பட்டுள்ளது.
ங
இந்த எழுத்து முன்பு (’) (ஒற்றை மேற்கோள் குறி) இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், உ-கர எழுத்துகளை உருவாக்கும் இணைப்பு எழுத்து இங்கே கொண்டு வரப்பட வேண்டியிருப்பதால்,
இந்த ‘ங’ என்ற எழுத்து அதற்கு மேலே உள்ள ‘[’ என்ற எழுத்தின் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாமினி/டைப்ரைட்டர் இடத்தில் (’) என்ற எழுத்தைத் தட்டினால் ‘பு’, ‘ஙு’, ‘யு’, ‘வு’
ஆகிய எழுத்துகளுக்கான உருபு இடம் பெற்றிருந்தது, ஆனால், விக்டோரியனில் இதற்கான தேவை
ஏற்படவில்லை என்பதால், அந்த உருபு அங்கே வைக்கப்படவில்லை.
ஞ
இந்த எழுத்து பாமினியில்/டைப்ரைட்டரில் இரட்டை மேற்கோள் குறி (“) இருக்கும்
இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், விக்டோரியனில் தமிழ் அடிப்படை எழுத்துகளை மேல்
தட்டில் (Shift Position) வைக்கக் கூடாது என்ற விதி பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த
எழுத்து தற்போது ‘]’ என்ற ஆங்கில எழுத்து இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் சொற்களில் இதன் பயன்பாடு மிகக் குறைவாக இருப்பதால், குவியெழுத்துகள் (Focul
Letters) இருக்கும் இடத்துக்கு மிகவும் தொலைவில் வைக்கப்பட்டிருக்கிறது.
‘டி’, ‘டீ’ எழுத்துகள்
விக்டோரியன் முறையில் இந்த எழுத்துகளுக்கான இடம் ஒதுக்கப்பட
வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ‘டி’ என்ற எழுத்து உருவாக்க, ‘ட’ மற்றும் ‘ி’எழுத்துகளைத்
தட்டினால் (அல்லது ஆங்கிலத்தில் ‘lp’ தட்டினால்) உருவாகும். அதே போல், ‘டீ’ என்ற எழுத்தை
உருவாக்க, ‘ட’ மற்றும் ‘ீ’ எழுத்துகளைத் தட்டினால் (அல்லது ஆங்கிலத்தில்
‘lP’ தட்டினால்) உருவாகும். இதன் அடிப்படையில், ‘டி’ மற்றும் ‘டீ’ ஆகிய எழுத்துகளுக்கு
‘o’ மற்றும் ‘O’ ஆகிய ஆங்கில எழுத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. மாறாக இந்த இடத்தில்
‘ழ’ என்ற எழுத்தும், ‘௺’ என்ற சொற்சுருக்கமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வடமொழி எழுத்துகள்
பாமினி/டைப்ரைட்டர் முறையில் அடுக்கப்பற்றிருந்த இந்த ஏழு
வட மொழி எழுத்துகளும் (ஶ, ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ) முற்றிலும்
இட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எண் வரிசையின்
(1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, -. =) மேல் தட்டில் உள்ள எழுத்துகள் (!. @. #. $.
%. ^. &. *. (. ). _. +) தமிழ் தட்டச்சுகளுக்கும் அவசியம் என்பதால், அந்த எழுத்துகள்
இரண்டு மொழிகளுக்கும் இருக்கும் இடத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்படுவதால்
இந்த ஏழு வடமொழி எழுத்துகளும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், விக்டோரியனில் எளிதாக
நினைவில் வைத்துக் கொள்ளும் நோக்கில், அவை இரண்டாவது விசையடுக்கின் வலப்பக்கத் தொங்கலிலும்
(ஷ, க்ஷ, ஶ ஆகிய எழுத்துகள்),
‘ஸ’ மற்றும் ‘ஹ’ ஆகிய ஆங்கில எழுத்துகளின் மேல் தட்டிலும் (B, N), ‘ஸ்ரீ’
என்ற விநோத வட மொழி எழுத்து ‘~’ என்ற குறி இருக்கும் இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளன.
உ-கர, ஊ-கார எழுத்துகள்
பாமினி/டைப்ரைட்டர் முறையில் ஒதுக்கப்பட்டுள்ள மேல்
தட்டு (Q, W, E, R, T, Y, U, I, O, P, {, },|, A, S, D, F, G, H, J, K, L, :, “) இடங்கள்
விக்டோரியனில் இவ்வெழுத்துகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பாமினி/டைப்ரைட்டர் முறையில் இவை இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் உள்ள மேல் தட்டில் (Shift
Positions) அடுக்கப்பட்டிருந்தன. பண்டைய முறையில் ஒரு சில ஊ-கார எழுத்துகள் என் வரிசையின்
மேல் தட்டிலும் காணப்படுகின்றன. ஆனால், விக்டோரியன் முறையில் உ-கர எழுத்துகளுக்கு
(ளு, னு, கு, ழு, து, மு, டு, ணு, று, நு, சு, கூ, லு, ரு), (’) என்ற விசையும், ஊ-கார
எழுத்துகளுக்கு (”) என்ற எழுத்தும் ஒதுக்கப்பட்டுள்ளதால் பண்டைய முறையில் ஒதுக்கப்பட்ட
மேல் தட்டு (Shift Keys) இடங்கள் விக்டோரியனில் தவிர்க்கப்படுகின்றன.
தமிழ் எண்கள் / தமிழ் சுருக்கெழுத்துகள்
பாமினி/டைப்ரைட்டர் முறையில் இந்த
எழுத்துகளுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் விக்டோரியன் முறையில் தமிழ் எண்களுக்கு
(௦, ௧, ௨, ௩, ௪, ௫, ௬,௭, ௮, ௯, ௰, ௱, ௲) மூன்றாவது
வரிசையின் மேல் தட்டும் (3rd Row Shift), குறுக்கெழுத்துகளுக்கு (௳. ௴, ௵, ௶, ௷, ௸, ௹, ௺, ள, வ) இரண்டாவது
வரிசையின் மேல் தட்டும் (2nd Row Shiftt) ஒதுக்கப்பட்டுள்ளன.
இதர குறிப்புகள்
பாமினி முறையில் தட்டுகிறவர்கள் எ-கர எழுத்துகளை உருவாக்குவதற்கு
‘b’ என்ற ஆங்கில எழுத்துகளையும், ஏ-கார எழுத்துகளைத் தட்டுவதற்கு ‘n’ என்ற ஆங்கில எழுத்துகளையும்
முதலில் தட்டும் நிலை ஏற்படும் நிலையில், விக்டோரியன் முறைக்கு மாறும் போது, பயநர்கள்
சிறமத்தை எதிர்நோக்கலாம். ஆனால், குறிப்பாகா ஏ-கார எழுத்துகளுக்கு ‘ெ’ என்ற இணைப்பு
அடிக்கடி தட்டப்படும் எழுத்து என்பதால், இதை மேல் தட்டில் (Shift Position) வைப்பது
தர்க்க ரீதியாக தவறான வாதமாகும். எனவே, டைப்ரைட்டர் முறையில் ‘ெ’, ‘ே’ ஆகிய குறிகள்
வைக்கப்பட்டுள்ளன.
விக்டோரியன் 1.4 பதிப்பு
விக்டோரியன் மென்பொருளைப் பதிவிறக்கும் தொடுப்பு....
Victorian Tamil Keyboard can be downloaded at http://demo.acetouch.com.my/.
பின்வரும் தொடுப்பில் இடம் பெற்றுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்...
Please feel free to answer my survey at https://www.surveymonkey.com/create/preview/?sm=6v_2FmTgrRltJ9KAG1oprtl6KoHBLtO_2F_2FIN_2FEtcSL7luQ_3D
Victorian Tamil Keyboard can be downloaded at http://demo.acetouch.com.my/.
பின்வரும் தொடுப்பில் இடம் பெற்றுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்...
Please feel free to answer my survey at https://www.surveymonkey.com/create/preview/?sm=6v_2FmTgrRltJ9KAG1oprtl6KoHBLtO_2F_2FIN_2FEtcSL7luQ_3D
Monday, June 17, 2019
Wednesday, May 29, 2019
விக்டோரியன் தமிழ் விசைப்பலகை
வணக்கம்.
முன்னுரை
சுமார் 40 ஆண்டுகளாக
தமிழில் ஆவணங்கள் தயாரித்த அனுபவத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு தமிழ் விசைப்பலகை
முறையை வடிவமைத்து, இவ்வாண்டில் அதற்கான காப்புரிமையும் பெற்று விட்ட மகிழ்ச்சியில்
இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன். கட்டுரையின் தலைப்பைப் பார்த்த மாத்திரத்திலேயே,
இனி எதற்குப் புதிய விசைப் பலகை முறைமை என்று சிந்திப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.
ஆனால், உண்மையில் ஏற்கனவே செம்மையாக உருவாக்கப்பட்ட ஒரு விசைப்பலகை முறையைத் தூசி தட்டி,
அதன் சிறப்புகளை வெளிக் கொணரும் அதே நேரத்தில் அதில் காணப்பட்ட சின்னஞ்சிறு குறைபாடுகளைக்
களைந்து காட்டுவதற்கே இக்கட்டுரை எழுதப்படுகிறது என்பதை வாசகர்கள் அதன் முடிவில் உணர்வார்கள்.
முத்தையா
விசைப்பலகை
இந்தப் பெயரைக் கேட்டவுடன்
பலர் வியப்பில் தங்கள் புருவத்தை உயர்த்துவர். இது என்ன புது
இந்தப் பெயரைக் கேட்டவுடன்
பலர் வியப்பில் தங்கள் புருவத்தை உயர்த்துவர். இது என்ன புது விசைப்பலகையா? என்று அவர்கள்
கேட்கக் கூடும். உண்மையில் இது ஓர் அருமையான விசைப் பலகை முறைமை. ஆய்வாளர்கள், கணினியின்
தேவைகளுக்கேற்ப இந்த விசைப்பலகை முறைமையைத் திருத்தியமைத்திருந்தால், இது போன்ற கட்டுரையை
சுமார் 25 வருடங்களுக்கு முன்பே கண்டிருப்பர். கீழே உள்ள படத்தைப் பார்த்தவுடன், “ஓ,
இதுவா? இது பழைய டைப்ரைட்டர் விசைப்பலகை அல்லவா?”, என்று வாசகர்கள் மனதில் நினைத்தால்,
வேடிக்கையில்லை.
கணினி விசைப் பலகைகளில்
[F], [J] ஆகிய விசைகளில் ஒரு சிறிய மேட்டைக் கவனித்திருப்பீர்கள். உண்மையில் இது தற்செயலாக
உருவாக்கப்பட்ட மேடு அல்ல. விசைப் பலகை முறையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களின் கண்கள்
கட்டப்பட்டிருந்தாலும் கூட, அவர்களிடம் எந்த வித்தியாசமான விசைப் பலகையைக் கொடுத்தாலும்,
அவர்களால் இந்த மேட்டை அடையாளம் கண்டு, தங்கள் விரல்களை சரியான விசைகளில் அடுக்கி விடுவர்.
தொடர்ந்து தங்கள் பார்வையை விசைப் பலகையில் குவிய விடாமல், கணினித் திரையில் மட்டும்
அதிக கவனம் செலுத்தி தங்கள் வேலைகளைச் செம்மையாகச் செய்வர்.
ஆங்கிலத்தில் [F],
[J] எழுத்துகள் அதிக புழக்கத்தில் உள்ளது போல, தமிழில் [க], [த] ஆகிய இரண்டு எழுத்துகள்
அதிக புழக்கத்தில் உள்ளவை என்று அறிந்து, இந்த இரண்டு ஆங்கில எழுத்துகளின் இடத்தில்
[க], [த] ஆகிய இரண்டு தமிழ் எழுத்துகளை முத்தையா ஞானமாக அடுக்கியிருக்கிறார்.
உயிர் எழுத்துகளை இவ்விரண்டு
எழுத்துகளுக்குக் கீழே உள்ள வரிசையில் அடுக்கியது அவருடைய இன்னொரு திறமையான செயல்.
அவர் தமிழில் உள்ள குறில், நெடில் இலக்கணத்தை விசை அடுக்கு முறையில் மிக நேர்த்தியாகக்
கையாண்டிருக்கிறார். நவீன கணினி அறிவியலாளர்களுக்கு இந்த இலக்கணத்தின் முக்கியத்துவம்
தெரியாமல் போனது வியப்பான காரியமல்ல. அவர்கள் அறிவியல் சார்ந்தவர்கள் என்பதால், குறிலையும்
நெடிலையும் ஒரே விசையில் இணைக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது.
உதாரணமாக [உ], [ஊ] ஆகிய எழுத்துகளை ஜோடி சேர்த்து ஒரே விசையில் அடுக்கினால், தமிழில்
தட்டுகிறவர்கள் இடக் கையின் நடு விரலைக் கொண்டே இவ்விரண்டு எழுத்துகளையும் தட்டுவார்கள்.
இப்படி, ஒவ்வொரு கோணத்திலும் ஆராய்ந்து பார்க்கும் போது, அவருடைய மதி நுட்பத்தை இக்காலக்
கணினி அறிஞர்கள் ஆதாயப்படுத்திக் கொள்ளாமல் போனதைக் குறித்து நொந்து கொள்வார்கள்.
முத்தையா
விசைப்பலகை முறையில் குறைபாடுகள் உண்டா?
இந்த விசைப்பலகையில்
குறைபாடுகள் உண்டு. உதாரணமாக [,] , [.] ஆகிய இரண்டு நிறுத்தக் குறிகள், ஆங்கில விசைப்
பலகையின் அதே இடத்தில் அமர வேண்டியதற்குப் பதில், ஒரு விசை நகர்ந்திருக்கின்றன. இதனால்,
இரண்டு மொழிகளில் தட்டுகிறவர்களுக்கு விரல் தடுமாற்றம் ஏற்படுகிறது. உதாரணமாக தமிழில்
முற்றிப்புள்ளி தட்ட நினைப்பவர்கள், அந்த இடத்தில் காற்புள்ளி இருப்பதை உணராமல் தட்டுகிறார்கள்.
இந்தப் பிரச்னையைத்
தவிர்ப்பதற்கு விக்டோரியன் விசைப்பலகையில் வழங்கப்பட்ட பரிந்துரையைக் கீழே காணலாம்.
[Q] விசையில் [ணு]
என்ற உ-கர எழுத்து மட்டும் ‘கீழ் தட்டில்’ அமர்ந்திருக்கிறது. அதிகப் பயன்பாட்டில்
இல்லாத இந்த உ-கர எழுத்தை கீழ் தட்டு (lower case) இடத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியமே
இல்லை. 16ம் நூற்றாண்டில் முத்தையா இந்த எழுத்துக்கு தனி விசை ஒதுக்கியதற்குக் காரணம்
இருக்கிறது. தமிழ் எழுத்துகளிலேயே அதிக ‘பருமணான’ எழுத்தாக [ணு] கருதப்படுகிறது. டைப்ரைட்டர்
காலத்தில் எல்லா எழுத்துகளுக்கும் ஒரே அளவிளான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒதுக்கப்பட்ட
இடத்துக்குள் இந்த ‘பருமணான’ எழுத்தை அடக்க முடியவில்லை. எனவே, முத்தையா அந்த எழுத்தை
‘உடைத்து’ விசையின் கீழ்ப் பகுதியிலும் (lower case), மேற் பகுதியிலும் (upper
case) தனித் தனியாக வைத்தார். ஆனால், கணினிகளில் பெரும்பாலான செயலிகள் எழுத்துகளின்
‘பருமண்’ அடிப்படையில் இடம் ஒதுக்கக் கூடியவை என்பதால், இந்த அம்சத்தை நாம் புறக்கணித்து
விடலாம்.
கணினியில், [டி], [டீ]
ஆகிய இரண்டு இ-கர எழுத்துகளுக்கும் தனி விசை ஒதுக்கத் தேவையில்லை. இ-கர, ஈ-கார வரிசை
எழுத்துகளில் இவ்விரண்டு மட்டும் வேடிக்கையானவை. முத்தையா காலத்தில் இவ்விரண்டுக்கும்
தனி விசை ஒதுக்க வேண்டியிருந்தாலும், கணினிப் பொறி பரிணாமம் அடைந்த நிலையில், இந்த
ஜோடி எழுத்துகளை அகற்றி விட்டு, அவற்றிக்குப் பதிலாக மேல் தட்டில் (Upper Case) வைக்கப்பட்ட
வேறு முக்கியத்துவம் வாய்ந்த அகரம் ஏறிய உயிர்மெய் எழுத்தை. அப்படிப் பார்க்கும் போது,
[H] விசையின் மேல் தட்டில் (Uper Case) அமர்ந்திருக்கும் [ழ] என்ற எழுத்தை இந்த [டி]
இருக்கும் இடத்துக்கு மாற்றலாம்.
அடுத்து முத்தையா விசைப்பலகையில்
பிரச்னையாகக் கருதப்படுவது [ஞ] என்ற எழுத்துதான். மற்ற அகரமேறிய மெய்யெழுத்துகள் கீழ்
தட்டில் (Lower Case) அமர்ந்திருப்பதால் இதையும் வேறு இடத்துக்கு மாற்றலாம். இப்படியாக
19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட முத்தையா விசைப் பலகையை இந்த 21ம் நூற்றாண்டின் அனுகூலங்களின்
அடிப்படையில் விக்டோரியன் விசைப்பலகையாக மாற்றும் போது, நமக்குப் பின்வரும் விசைப்பலகை
முறைமை கிடைக்கும்:-
தமிழ் உயிர்மெய் எழுத்துகளில்
உ-கர மற்றும் ஊ-கார எழுத்துகள் சீரான வடிவங்களைக் கொண்டிராததால், முத்தையா அவற்றை அகரமேறிய
உயிர்மெய்யோடு ஜோடி சேர்த்தார். உதாரணமாக ள à ளு, ன
à னு, க
à கு, த
à து, ம
à மு, ட
à டு ற à று, ந
à நு, ச
à சு ல à லு, ர
à ரு, ஆனால், கணினி விசைகளில் அப்படிச் செய்யத் தேவையில்லை.
கணினிகள் செயற்கை முறையில் ‘சிந்திக்கும் தன்மையைக்’ (Artificial Intelegent) கொண்டிருப்பதால்,
இ-கர, ஈ-கார எழுத்துகளைத் தட்டுவதற்கு ‘துணை விசை’ பயன்படுத்தப்படுவது போல், இவ்விரண்டுக்கும்
நாம் ட என்ற விசையோடு [P]-இல் அமர்ந்திருக்கும் [ி], [ீ] ஆகிய
துணை விசைகளைப் பயன்படுத்தி [டி], [டீ] ஆகிய எழுத்துகளை உருவாக்கலாம். விக்டோரியன்
விசைப்பலகையில் [‘], [“] என்ற இடத்தில் [ு], [ூ] ஆகிய
இரண்டையும் வைத்து விட்டால் போதுமானது. [P] விசைக்குப் பக்கத்தில் உள்ள ‘[‘, ‘{‘ ஆகிய
விசைகளில் [ூ] [ு] ஆகிய விசைகளை நகர்த்தி விட்டால், [ங] என்ற எழுத்தை ‘]’–க்கு
மாற்றி விடலாம். இப்படி இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை விசைகளின் மேல் தட்டுகளை
(Upper Case) காலியாக்கிவிட்டு, அவற்றிக்கு வேறு பயனுள்ள எழுத்துகளை அடுக்கலாம். விக்டோரியன்
விசைப்பலகை முறையின் இரண்டாவது வரிசை மேல் தட்டில் (Upper Case) தமிழ் குறியீடுகளும்,
மூன்றாவது வரிசையில் தமிழ் எண்களும் அடுக்கப்பட்டுள்ளன.
விக்டோரியன் விசைப்பலகையில்
இவ்வளவுதான் சிறப்பம்சங்களா என்று கேட்டால், அதற்கு பதில், ‘இல்லை’ என்பதே. காரணம்,
இந்த அடுக்கு முறை, ஏக காலத்தில் மூன்று அல்லது நான்கு விதமாக ஓர் எழுத்தை உருவாக்கும்
அற்புதம் அடங்கியிருக்கிறது. இது, தற்போதைய விசைப் பலகை முறையில் சிந்தித்துக்கூட பார்த்திராத
புதுமையான முறையாகும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் விசைப்பலகை முறைமைகள் யாவும்,
ஓரெழுத்தை உருவாக்க ஒரே ஒரு முறையை மட்டுமே வழங்குகிறது. உதாரணமாக [கோ] என்ற எழுத்தை
முத்தையா பாணியில் தட்ட வேண்டுமென்றால், [n], [f], [h] ஆகிய விசைகளைத் தட்ட வேண்டும்.
இதைத் தவிர வேறு வழிகள் உள்ளனவா?
விக்டோரியன் விசைப்
பலகை முறை, இதைத் தவிர மேலும் மூன்று வகைகளில் தட்ட இடமளிக்கிறது. மேற்கண்ட தட்டு முறையை
‘விக்டோரியன் பேசிக்’ என்று பெயர் சூட்டிக் கொள்வோம். இதற்கு அப்பால், எழுத்துச் சேர்ப்பு
(பொனெட்டிக்) முறையிலும், ‘பொனெட்டிக் லோவர்’ முறையிலும், எண் (நம்பர்) முறையிலும்
தட்டி இந்த எழுத்தை உருவாக்கலாம். ‘பொனெட்டிக் முறையில் [f], [X] என்ற ஈரெழுத்துகளைத்
தட்டி இதே முறையை உருவாக்கலாம். ‘பொனெட்டிக் லோவர்’ முறையில் [f], [x], [x] தட்டினாலும்
இதே ‘கோ’ என்ற எழுத்தை உருவாக்கலாம். அதாவது, ஒரு பயனருக்கு மேல் தட்டு விசையைப்
(Shift) பயன்படுத்த விருப்பமில்லை என்றால், அவர் ‘பொனெட்டிக் லோவர்’ முறையைப் பயன்படுத்தலாம்.
விசைப்பலகையின் முதல்
வரிசையில் இடம் பெற்றிருக்கும் எண்களையும் கொண்டு தமிழ் நெடுங்கணக்கில் உள்ள அத்தனை
எழுத்துகளையும் உருவாக்கலாம். உங்கள் முன் ஒரு விசைப்பலகை இருந்தால், அதன் முதல் வரிசை
விசைகளைச் சற்று ஆராயுங்கள். அதில் 12 விசைகள் இருப்பதை அறிவீர்கள். தமிழ் நெடுங்கணக்கிலும்
12 உயிரெழுத்துகள் இருக்கின்றன அல்லவா? விசைப்பலகையில் அடுக்கப்பட்ட அகரம் ஏறிய உயிர்மெய்
எழுத்துகளைப் பயன்படுத்தி, கூடவே இந்த எண்களில் ஏதாவது ஒன்றைத் தட்டி நமக்கு விருப்பமான
உயிர் மெய்யை உருவாக்கி விடலாம். உதாரணமாக இதே [கோ] என்ற எழுத்தை இந்த எண் வரிசை மூலம்
உருவாக்க வேண்டும் என்றல், அதற்கு, [f], [0] என்று தட்டினாலும் [கோ] அவ்வெழுத்து கிடைத்து
விடும். ஆக, ஒவ்வொரு தரப்பினரும் தமிழ் எழுத்துகளை இஷ்டம் போல் அடுக்கி குழப்பம் நிறைந்த
விசைப் பலகை முறையை அறிமுகப்படுத்தாமல், முத்தையா பாணியிலான ஒரே அடுக்கு முறையில்,
நான்கு விதமாக தட்டும் ஆற்றலை இந்த விக்டோரியன் விசைப்பலகை முறைமை கொண்டிருக்கிறது
என்பதை இதன் மூலம் வாசகர்கள் அறியலாம்.
இந்த ஒரே விசை முகத்தில்
பல்வேறு பாணியில் எழுத்துகளைத் தட்டும் ஒருங்கிணைப்பை ‘விக்டோரியன் இயுரெக்கா[1]’ என்று பெயர் சூட்டியுள்ளேன். ஆக,
விக்டோரியன் இயுரெக்காவில் [கோ] என்ற எழுத்தைத் தட்ட, 1) [bfh]; 2) [fX]; 3)
[fxx]; 4) [f0] என்று எந்த முறையில் தட்டினாலும் நமக்கு கோ என்ற எழுத்து கிடைத்து விடும்.
இன்னும் சில
சிறப்பம்சங்கள்
விக்டோரியன் அடுக்கு
முறையில் ஆங்கிலப் பயன்பாட்டில் உள்ள [~], [!], [@], [#], [$], [%], [^], [&],
[*], [(], [)], [_], [+], [-], [=] ஆகிய எழுத்துகளை இயல் நிலையிலேயே தட்டலாம். முத்தையா
மற்றும் பாமினி முறையில் இந்த எழுத்துகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை; அல்லது வேறு
இடத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இரண்டு மொழிகளில் தட்டுகிறவர்களுக்குத்
தடுமாற்றம் ஏற்படுகிறது. விக்டோரியன் முறையில் பின்வரும் எழுத்துகள் தட்டப்பட முடியாதது
உண்மைதான்: [[], []], [\], [;], [‘], [{], [}], [|], [:], [“]. பொதுவான விசைப்பலகையில்
காணப்படும் எழுத்துகள் தட்டும் முறையில் கைவிடப்பட்டால் அது ஒரு நஷ்டமே. இதைக் கையாள
விக்டோரியன் முறையில் வழியுண்டு. அஃதென்னவெனில், [/] என்ற எழுத்தைத் தட்டிய பிறகு விரும்பும்
இந்த விசையைத் தட்டுவதாகவும். உதாரணமாக [/]
+ [\] = [\]; [/] + [“] = [“] என்று உருவாகும். அதாவது இங்கு [/] கணினிக்கு உத்தரவிடும்
விசையாகக் கருதப்படுகிறது. விசைப்பலகையில் காணப்படும் அவ்விடங்களில் தமிழ் எழுத்துகள்
அடுக்கப்படும் தேவை இருப்பதால், [/] விசையைத் தட்டிய பிறகு இந்த தமிழ் அல்லாத எழுத்துகளைத்
தட்டினால், விசைப்பலகையில் காணப்படும் அந்த எழுத்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். அரைக்கால் புள்ளியையும், முக்கால்
புள்ளியையும் நாம் அடிக்கடி தட்ட நேரிட்டாலும், முத்தையா, பாமினி போன்ற முறையில் இவை
அறிந்து கொள்ளப்பட முடியாத இடத்தில் அடுக்கப்பட்டிருப்பதால், பயநர்களுக்குக் குழப்பம்
ஏற்படுகிறது. இதைக் கையாள்வதற்கு ஓர் எளிய முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது
[,] [.] ஆகிய எழுத்துகளுக்கு மேலே உள்ள [<], [>] எழுத்துகள் தமிழுக்கான பயன்பாட்டில்
இல்லாதவை ஆகும். காற்புள்ளிக்கு [,] மேலே அரைக்காற்புள்ளியையும் [;], முற்றுப் புள்ளிக்கு
[.] மேலே முக்காற்புள்ளியையும் [:] வைத்து விட்டால், பயநர்கள் அவற்றை எளிதாக அடையாளம்
காண முடியும்.
விக்டோரியன்
விசைப்பலகை முறையால் யாருக்கு என்ன நன்மை?
ஒரு வேளை கணினி அறிவியலாளர்கள்
இக்கேள்வியை எழுப்பக்கூடும். முதலாவதாக, இந்த விசைப் பலகை முறையால், நம் கண்ணுக்குத்
தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தையா குடும்பத்தாருக்கு நாம் உரிய அங்கீகாரம்
வழங்குகிறோம். அவர் வடிவமைத்த முறைமை அடிப்படையிலேயே விக்டோரியன் விசைப்பலகை சீரமைப்புகளோடு
உருவாகியுள்ளது. இரண்டாவது, தட்டச்சு பாணியில் தட்டுகிறவர்கள் சில மணி நேரப் பயிற்சிகளுக்குப்
பிறகு, இந்த முறையில் தேர்ச்சி பெற்று அந்த நன்மையை அடைவர். மூன்றாவதாக, இலங்கையில்
அதிக புழக்கத்தில் உள்ள பாமினி விசைப்பலகை பயனர்கள் இந்த நன்மையைப் பெறுவர். பாமினி
விசைப்பலகை முறைமை, முத்தையா முறைமையைச் சார்ந்திருப்பதால், அவர்களும் இதை மிக விரைவாக
உள்வாங்கிக் கொள்வார்கள். இறுதியாக, முறையான விரல் அடுக்கு முறையில் தட்டுகிற யாவரும்,
தங்கள் இரண்டு கைகளில் உள்ள அனைத்து விரல்களையும் பயன்படுத்தி, அவற்றுக்கு ஏற்படும்
சோர்வைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும், அவர்கள் தங்கள் கண்களுக்கும், கழுத்துகளுக்கும்
ஏற்படுத்தும் அயர்வைப் போக்கிக் கொள்ளலாம். விரல் அடுக்கும் ஒழுங்கு முறை தெரியாதவர்களுக்கும்
இதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. விக்டோரியன் விசைப்பலகை ஒரு பக்கம் முத்தையா அடுக்கு
முறையையும் மறுபக்கம் பாமினி அடுக்கு முறையையும் உள்வாங்கிக் கொள்கிறது என்பதைக் கீழே
உள்ள ஒப்பீடு காட்டுகிறது.
நடப்பில்
உள்ள விசைப்பலகைகளில் காணப்படும் சில முக்கிய குறைபாடுகள்
முத்தையா விசைப்பலகை
முறையில் காணப்படும் குறைபாடுகள் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டு விட்டன என்பதால் அவற்றை
மீண்டும் இங்கு குறிப்பிடப் போவதில்லை. புழக்கத்தில் உள்ள இதர விசைப்பலகை முறையில்
காணப்படும் குறைபாடுகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த முறைகளை உருவாக்கியவர்களின்
உழைப்பைச் சிறுமைப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அவர்கள் அறிவியல் சார்ந்தவர்கள் என்பதால்,
அந்தத் தவறுகளுக்காக அவர்களைக் குற்றப்படுத்த முடியாது.
அ) தமிழ்99 விசைப்பலகை
இந்த தமில்99 விசைப்பலகையில்
[ழ] என்ற எழுத்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. முற்றுப்புள்ளிக்குப் பின்னர் முக்கியத்துவம்
வாய்ந்த ஓர் எழுத்தை அமைப்பது எந்த அடுக்குமுறைக்கும் பொருந்தாது. [G], [H], [J] ஆகிய
விசைகளின் மேல்தட்டு காலியாக விடப்பட்டிருப்பது ஒரு துரதிர்ஷ்டமான காரியம். முக்கியத்துவம்
வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இவ்விசைகள் காலியாக விடப்பட்டிருக்கக் கூடாது. உயிர் எழுத்துகள்
ஜோடி சேர்க்கப்படவில்லை. உயிர் ஏழுத்துகளை இடப் பக்கமாகவும், அகரமேறிய உயிர்மெய்களை
வலப் பக்கமாகவும் அடுக்கியிருப்பது தர்க்க ரீதியான சிந்தனைக்கு எட்டவில்லை. உண்மையில்
உயிரெழுத்துகள் மொத்தம் 7 மட்டுமே. ஆனால், அறிவியலாளர்கள அதை 12-ஆகக் கணக்கிட்டு விட்டார்கள்.
7 எழுதுதுகளை இடக் கை விரல்களுக்கும் 18 எழுத்துகளை வலக் கை விரல்களுக்கும் ஒதுக்க
வேண்டிய அவசியமில்லை.
அ) பாமினி விசைப்பலகை
பாமினி முறை, முத்தையா
முறையைச் சார்ந்திருந்தாலும் [ே] எழுத்தை [N] விசையின் மேல் தட்டில் (Shift) வைத்தது ஒரு
தவறான காரியம். ஏ-காரம், ஓ-காரம் ஆகிய வரிசைகளில் மொத்தம் 36 எழுத்துகளுக்குத் துணையாகத்
தட்டப்பட வேண்டிய எழுத்தை மேல் தட்டில் வைப்பது தர்க்க சிந்தனைக்கு முரண்பட்டிருக்கிறது.
இந்த 36 எழுத்துகளையும் தட்டும்போது ஒரு பயநர் ஒவ்வொரு முறையும் ஷிப்ட் (Shift) விசையைத்
தட்ட வேண்டும். இது நிச்சயமாக நேர விரயத்தை உண்டு பண்ணும்.
இ) இன்ஸ்கிரிப்ட் விசைப்பலகை
இந்த இன்ஸ்கிரிப்ட்
விசைப்பலகை முறையிலும் [ய] மற்றும் [ஒ] விசைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஒ-கர எழுத்துகளை
விட ஔ-கார எழுத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. ஆனால், இங்கு [ஔ] வரிசை எழுத்துகளுக்கு
[Q] என்ற விசையும், [ஒ] வரிசை எழுத்துகளுக்கு [`] விசையும் ஒதுக்கப்பட்டிருப்பது வேடிக்கையான
காரியமாகும். அத்தோடு [ப], [க], [த] ஆகிய எழுத்துகளுக்கு இரண்டு விசைகள் ஒதுக்கப்பட்டிருப்பது
பலவீனமான காரியமாகக் காணப்படுகிறது. இந்த மூன்று விசைகளில் ஒன்றில் [ய] விசையை வைத்திருக்கலாம்
அல்லவா?
முடிவுரை
பலர் தங்கள் மன அபிலாசைகளின்
அடிப்படையில் தமிழுக்கு விசைப்பலகை அமைக்க முற்படுவதால், இது குறித்து நான் பலரிடம்
பேசியும் பயனில்லாமல் போயிற்று, இதற்கிடையில், இதற்குக் காப்புரிமை கிடைத்து விட்டதால்,
இந்த விசைப்பலகை முறையை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்துகிறேன். தமிழ் மென்பொருள் தயாரிப்பு
நிறுவனங்கள் எனக்கு ஒரு மென்பொருளை உருவாக்கித் தர விரும்பினால் அவர்களை வரவேற்கிறேன்.
தங்கள் மென்பொருள்களில் இதை உள்வாங்கிக் கொள்கிறவர்கள் என்னிடம் எழுத்துப்பூர்வமான
அனுமதியைப் பெற்றுக் கொள்ளவும். மைக்ரோசாஃப்ட், கூகிள், கீமென் போன்ற நிறுவனங்கள் இந்த
விசைப்பலகை முறையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
Tuesday, July 8, 2014
Sunday, June 15, 2014
Subscribe to:
Comments (Atom)







